அறிமுகம் தமிழ்ப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் உ.வே.சாமிநாதர், 1855 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி, பாபநாசம் அருகேயுள்ள உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். இவரது தாயார் இவரை ‘சாமிநாதன்’ என்ற செல்லப் பெயரால் அழைக்க, அதுவே பின்னர் நிலைபெற்றுவிட்டது.
வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பச் சூழல் காரணமாக ஊர் ஊராக இடம் பெயர்ந்து, வாய்ப்புகளைத் தேடி அலைந்தபோதும், மனம் தளராமல் சடகோப ஐயங்கார் மற்றும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் விடாமுயற்சியுடன் தமிழ் கற்றுச் சிறந்த தமிழறிஞராக உயர்ந்தார்.
தமிழ் மற்றும் சமூகப் பணி 1880 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் 23 ஆண்டுகளும், பின்னர் 1903 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் (Presidency College) 16 ஆண்டுகளும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
அழிந்து கொண்டிருந்த சங்ககால நூல்களையும், பிற இலக்கிய நூல்களையும், ஓலைச்சுவடிகளாகத் தேடிக் கண்டறிந்து, அவற்றில் சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் ஆராய்ந்து சரிசெய்து, முழுப்பொருள் விளங்கும் வகையில் பதிப்பித்து வெளிக்கொணர்ந்தார். சுமார் 3000-க்கும் அதிகமான ஓலைச்சுவடுகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து, தமிழ்ப் பதிப்புத் துறைக்கு மாபெரும் பங்காற்றினார்.
படைப்புகள் தமது 23 ஆம் வயதிலேயே, தருமையாதீனம் பெரிய காறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் அருளிய ‘தேசிக விலாசச் சிறப்பு’, ‘வேணுவனலிங்க விலாசச் சிறப்பு’ என்னும் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
விரிவான முன்னுரை, நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறு, கதைச் சுருக்கம் ஆகிய குறிப்புகளுடன், தமது முதல் பெரும் பதிப்பு முயற்சியாக 1887 ஆம் ஆண்டு அக்டோபரில் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்து வெளியிட்டார்.
சங்க இலக்கியங்கள், 12 புராணங்கள், 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை, 2 இரட்டைமணிமாலை, அங்கயற்கண்ணிமாலை போன்ற பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் தந்து, தமிழன்னைக்குச் செழுமை சேர்த்தார்.
கலைமகள் துதி, திருலோக மாலை, ஆனந்தவல்லியம்மை பஞ்சரத்னம் போன்ற சிறப்புமிக்க நூல்களையும் இயற்றியுள்ளார். ‘புதியதும் பழையதும்’, ‘நல்லுரைக் கோவை’ போன்ற உரைநடை நூல்களையும் இயற்றி வெளியிட்டுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவுகளே பின்னர் ‘சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாவைத்தியநாத ஐயர், கோபாலகிருஷ்ண பாரதியார் உள்ளிட்ட பல சிறந்த தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
‘என் சரித்திரம்’ எனும் தலைப்பில், தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஆனந்த விகடன்’ வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக உ.வே.சா. எழுதி வந்தார். இந்த நூல் 1950 ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது.
விருதுகள் / சிறப்புகள் 1906 ஆம் ஆண்டு ‘மகாமகோபாத்தியாய’ பட்டம், ‘தக்ஷிணாத்ய கலாநிதி’, ‘திராவிட வித்யாபூஷணம்’ போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
1932 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ ‘முனைவர்’ பட்டம் (D.Litt.) வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பெரும் தொண்டினைப் பாராட்டி, மக்களால் அன்புடன் ‘தமிழ்த்தாத்தா’ என்று போற்றப்பட்டார்.
1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் உ.வே.சா அவர்களின் உரையை கேட்ட மகாத்மா காந்தியடிகள், “இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற பேரார்வம் எனக்கு உண்டாகிறது” என்று போற்றினார்.
இந்திய அரசு, 2006 பிப்ரவரி 18 அன்று, இவரைச் சிறப்பிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
இவர் வாழ்ந்த உத்தமதானபுரத்தில் உள்ள இல்லம், தமிழ்நாடு அரசால் ‘உ. வே. சா. நினைவு இல்லம்’ ஆகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ருக்மணி தேவி அருண்டேல் அவர்களின் முயற்சியால், 1943 ஆம் ஆண்டு ‘டாக்டர் உ.வே.சாமிநாதர் நூல் நிலையம்’ சென்னை பெசன்ட் நகரில் நிறுவப்பட்டது.
தமிழுக்கு வளம் சேர்த்த தமிழறிஞர்களின் சேவைகளைப் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் ‘உ.வே.சா. விருது’ வழங்கப்பட்டு வருகிறது.