கம்பர்

கம்பர்

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்” என்றொரு பழமொழி உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும அனைவரும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிப்பேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியபில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஒட்டக்கூத்தர், புகழேந்தி போன்றனாரின் நன்மதிப்பையும பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்ளக வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றன அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியபில் அதைப்படைத்ததனால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு கம்பர் அவர்கள், கி.பி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதனால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் பிரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணெய்நல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்புடன் எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததனால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும, நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.

கம்பரின் கவிப்பலமும் மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்குச் சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்த்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்குச் சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.

கம்பராமாயணம்: காலத்தால் அழியா காவியம் கம்பரின் படைப்புகளிலேயே தனிச்சிறப்பு மிக்கதும், தமிழின் மிகச்சிறந்த காவியமாகப் போற்றப்படுவதுமான கம்பராமாயணம், வால்மீகி முனிவர் வடமொழியில் இயற்றிய ராமாயணத்தைத் தழுவி கம்பனால் தமிழில் எழுதப்பட்டது. வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தனது ஆழ்ந்த கற்பனைத்திறனாலும், கவிநயத்தாலும், பக்தியுணர்வோடும், தமிழ்ப் பண்பாட்டின் விழுமியங்களைச் சேர்த்தும், அதைத் தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலைநிறுத்தும் அரிய படைப்பாக மாற்றினார். இக்காவியம் ஆறு காண்டங்களாக (பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்) பிரிக்கப்பட்டுள்ளது. வள்ளல் சடையப்ப முதலியாரின் உதவியோடும், ஆதரவோடும் பல்லாண்டு காலம் செலவழித்து இக்காவியத்தை இயற்றினார். திருவரங்கத்தில் பல அறிஞர்களும் புலவர்களும் முன் இது அரங்கேற்றப்பட்டபோது, கம்பரின் கவிப்புலமையையும், இலக்கிய ஆழத்தையும் கண்டு அனைவரும் வியந்து போற்றினர்.

வள்ளல் சடையப்ப முதலியார் மீதான பற்று தனக்கு ஆதரவு வழங்கிய வள்ளல் சடையப்ப முதலியாரை, தனது காவியத்தில் ஆயிரத்திற்கு ஒரு கவி என்ற கணக்கில், பலமுறை குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கம்பராமாயணத்தில் பல இடங்களில் ‘மன்னிய பெரும்புகழ் சடையன்’ என்று குறிப்பிட்டு, தனது நன்றியுணர்வையும் குருபக்தியையும் வெளிப்படுத்தினார். இது, கம்பரின் பாசத்தையும், பெருந்தன்மையையும் பறைசாற்றுகிறது.

கம்பரின் தனித்துவம் கண்ணன் பெருங்கவியாய் விளங்கிய கம்பரின் கவிநயம், சொல்லாட்சி, உவமைகள், ரசனைமிகு வர்ணனைகள் ஆகியவை அவரைத் தனித்துக் காட்டின. பாற்கடல் அமிழ்தெனப் பொங்கும் தமிழ்ச் சொற்களைக் கையாண்டு, உவமைகளுக்கு உவமை கண்டவர் கம்பர். தமிழ் மொழிக்கு அணி சேர்த்தவர். ஆழ்ந்த பொருளையே எளிய நடையில் உரைக்கும் திறன் கொண்டவர். தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகளைப் பேணி, அதே சமயம் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவர். அவரது படைப்புகள் காலம் கடந்து நிற்கும் அற்புதப் படைப்புகளாகும்.

இறுதி காலம் மற்றும் மரபு கம்பரின் இறுதி காலம் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. எனினும், திருத்தணிக்கு அருகே உள்ள நாட்டாரசன் கோட்டையில் இயற்கை எய்தினார் எனவும், அங்கே கம்பரின் சமாதியும், சிலையும் இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. கம்பர் மறைந்தாலும், அவரது படைப்புகள் காலம் கடந்து நிலைத்து நிற்கின்றன. கம்பராமாயணம் மட்டுமல்லாமல், அவரது பிற படைப்புகளும் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. கம்பரின் திருவுருவச் சிலைகள் பல இடங்களில் நிறுவப்பட்டு, அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் வாழும் மாபெரும் கவியாகப் போற்றப்படுகிறார்.

Related posts

வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி: தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்!

தமிழ் இணையக் கல்விக்கழகம்: உலகத் தமிழ்க் கல்வி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பில் ஒரு புரட்சி

இணையத்தில் தமிழ் மின்னூல்கள்: முக்கியத் திட்டங்களும் தளங்களும்